நாகை அருகே பாசன வாய்க்காலில் கலக்கும் சாக்கடை- தொற்றுநோய் அபாயம் - மயிலாடுதுறை
நாகை: மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்படாமல் பாசன வாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை, உடனடியாகத் தடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடைத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் மூலம் மன்னம்பந்தலில் உள்ள சுத்திகரிப்புத் தொட்டிக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்படுகிறது.
சமீபகாலமாக பாதாள சாக்கடைக் குழாய்களில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்படுவதனால், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரருக்கு, பணி நீட்டிப்பு வழங்காமல் நகராட்சி நிர்வாகம் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக மன்னம்பந்தல் சுத்திகரிப்பு தொட்டிக்குச் செல்லும் கழிவு நீர், சுத்திகரிக்கப்படாமலேயே பச்சை நிறத்தில் வெளியேறி, பாசன வாய்க்காலில் கலந்துவருகிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகள், பெரியவர்கள் சிலருக்கு தொற்றுநோய் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவு நீர் பாசன வாய்க்காலில் கலப்பதை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.