வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கசம் பகுதியில் அரசு மதுபான டாஸ்மாக் கடை எண் 11105 இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையில் கசம், கண்டீப்பேடு, சேர்க்காடு, கரிகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுப்பிரியர்கள் நாள்தோறும் மதுபானங்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு உயர் ரக மதுபானங்கள் திருட்டு!
வேலூர்: காட்பாடி அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு சுமார் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் திருடப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் மேற்பார்வையாளர்கள் அமிர்தலிங்கம், விற்பனையாளர் திருநாவுக்கரசு ஆகியோர் விற்பனையை முடித்துவிட்டு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் டாஸ்மாக் கடையை திருநாவுக்கரசு திறந்தார். அப்போது கடையின் பின் பக்க சுவற்றில் பெரிய அளவில் துளையிடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து திருநாவுக்கரசு மேற்பார்வையாளர் அமிர்தலிங்கத்திற்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அமிர்தலிங்கம், வேலூர் டாஸ்மாக் மேலாளருக்கும், திருவலம் காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான உயர் ரக மதுபான பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்ட கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தும் முன் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.