நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவித்தது. அதன்படி வரும் ஆக.5 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்த முறையும் அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேலூர் தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் மனுதாக்கல் செய்தனர். குறிப்பாக பலர் வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடியும், ஆவி போன்று உடை அணிந்த படியும், கழுத்தில் கொய்யாப்பழம் மாலை அணிந்த படியும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
வித்தியாசமான முறையில் குதிரை மீது சவாரி செய்தபடி வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் இந்த நிலையில் வேலூர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 45 பேர் வேலூர் தேர்தலில் போட்டியிட 50 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் அடுத்தக்கட்டமாக பரப்புரையில் கவனம் செலுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், வேலூர் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.