வேலூர்: இரு நகரங்களுக்கிடையே விரைவான போக்குவரத்தை அளிக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் ரயில் சேவை தில்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 12ஆவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான சேவை தொடங்கப்படவுள்ளது. இந்தச் சேவையை ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
சோதனை ஓட்டம்:இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - கோவை இடையே வந்தே பாரத் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து காலை 5.00 மணிக்கு புறப்பட்டு காலை 11.40 மணிக்கு கோவை சென்றடைந்தது. பின்னர் கோயிைலிருந்து பகல் 12:40 மணிக்கு புறப்பட்ட ரயில் மாலை 6.40 மணிக்கு மீண்டும் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் தொழில்நுட்பரீதியாக ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நவீன வசதிகள் இல்லாத தற்காலிக பயண அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மேலும் மறுமார்க்கமாக சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும். சுமார் 495 கி.மீ தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிஷங்களில் கடக்கும். மேலும் இந்த சேவை புதன்கிழமை தவிர, அனைத்து நாள்களிலும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் 360 டிகிரி கோணமும் சுழலும் வகையில் இருக்கைகள், சிசிடிவி கேமரா, ரயில் ஓட்டுநரை நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டப் பல்வேறு வசதிகள் உள்ளன.