வேலூர்: மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். காட்பாடியை அடுத்த வன்றந்தாங்கல் வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி பிரபு (40) என்பவர், அவரது தாயார் முனியம்மாள் என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு, பிரபு திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவரது உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர். இது குறித்து பிரபு கூறுகையில், 'நான் எனது தாயாருடன் தனி வீட்டில் வசித்து வருகிறேன். எனது சகோதரிகள் பாகப்பிரிவினை என்ற பெயரில் பாதி சொத்தை எழுதி வாங்கிக் கொண்டனர். தற்போது மீண்டும் சகோதரிகள் இரண்டு பேரும் புரோக்கர் ஒருவருடன் சேர்ந்து, மேலும் எங்கள் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்.
இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தாலும், எங்களை எதுவும் செய்ய முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தீக்குளிக்க முயன்றேன்’ எனத் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.