வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த குடிமிப்பட்டியில் விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்துக்குள் வன விலங்குகள் வருவதைத் தடுக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த மின்வேலியில் சிக்கி காட்டுயானை ஒன்று இறந்துள்ளது. மறுநாள் காலையில் இறந்து கிடந்த யானையைப் பார்த்த அந்த நிலத்தின் குத்தகையாளர் யாருக்கும் தெரியாமல் அதன் மீது தென்னை ஓலைகளை போட்டு மூடி வைத்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் நேற்று மாலை அந்தப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழிதோண்டி, அதில் யானையை புதைத்துள்ளார். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா ஆகியோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் நடத்திய விசாரணையில் யானை புதைக்கப்பட்டது உறுதியானது.