வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை கே.எம். நகர் தெருவில் வசித்துவருபவர் அப்துல் ஆரிஃப். இவர் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி தொழில் செய்துவருகிறார். கடந்த ஒரு வருடமாக அப்துலின் தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இவரது தாயாரை கவனித்துக்கொள்ள செவிலியர் வேண்டும் என்று அப்துல் பலரிடம் கூறிவந்துள்ளார். இதையறிந்த வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் ஆபிதா என்ற பெண், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அப்துலிடம் செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியர் ஒருவர் இருப்பதாகவும், அவரை நேரில் வந்து அழைத்துச் செல்லுமாறும் பேசியுள்ளார்.
இதையடுத்து, அப்துல், ஆட்டோ மூலம் ஆபிதாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் முகமூடி அணிந்த நிலையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த ஐந்து பேர், அப்துலிடம் கத்தியை காட்டி பயமுறுத்தியுள்ளனர். மேலும் அவரை அரை நிர்வாணமாக்கி பெண் ஒருவருடன் புகைப்படம் எடுத்து பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் பதறிப்போன அப்துல் தன் கையிலிருந்த நான்காயிரம் ரூபாய் பணத்தையும், ஐந்து ஏடிஎம் கார்டுகளையும் அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை அந்த கும்பல் எடுத்துள்ளது. இதையடுத்து இரவு 10 மணிக்கு அப்துல்லை ஆட்டோ மூலம் பேருந்துநிலையத்தில் விடுவதற்காக கும்பலைச் சேர்ந்த ஒருவன் கூட்டிச்சென்றுள்ளான். அப்போது அப்துல் திடீரென கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் ஆட்டோவை மடக்கி இருவரையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதன்பின்னர் தொழிலதிபர் அப்துல் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினர் வாணியம்பாடியைச் சேர்ந்த ஆபிதா, தாரா, கோவிந்தராஜ், சதாம், சாது, அஸ்லாம், நதீம், மனோஜ்குமார், அசோன் உள்ளிட்ட பத்து பேரை கைது செய்தனர். இதையடுத்து பத்து பேரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் காளிமுத்துவேல் முன் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் காவல் துறையினரால் அடைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.