வேலூர்:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பாஸ்மார்பெண்டா கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வந்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை இருந்து வந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் பலர் பள்ளி வருவதையே பெற்றோர்கள் நிறுத்தியுள்ளனர். காடு மற்றும் மலைப்பகுதி என்பதனாலும் சீரற்ற சாலை அமைப்பினாலும் அப்பகுதிக்கு பேருந்து வசதி என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. இதனால் பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பேரணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் பாஸ்மார்பெண்டா அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மாணவர்களின் அவல நிலையை அறிந்த தினகரன், அந்த மாணவர்களின் சிக்கலைப் புரிந்துக் கொண்டு அவரது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி, அந்த மாணவர்களை தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்து வருவது மற்றும் பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு அழைத்துச் செல்வது என அரசு பள்ளி மாணவர்களுக்கான சேவையை தொடங்கியுள்ளார்.
தினமும் பள்ளிக்கு சீரான சாலை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகும் குழந்தைகளின் ஊருக்கே சென்று காலையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லவதும், பள்ளி முடிந்த பிறகு மாலையில் வீட்டில் விடுவது என இடைநிலை ஆசிரியர் ஆட்டோ அரசு பள்ளி குழந்தைகளுக்காக ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளார். தினகரனின் இந்த செயல் பள்ளி மாணவர்களிடையும் பெற்றோர்களிடையும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் தினகரனின் இந்த முயற்சி மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.