தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமூல் கேட்டு வேலூர் டாஸ்மாக் கடைகளில் ரவுடி கும்பல் அட்டகாசம்!

வேலூர்: டாஸ்மாக் கடைகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம், வேலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : May 4, 2019, 2:18 AM IST

டாஸ்மாக் கடையில் ரவுடிகள் அட்டகாசம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காகிதப்பட்டறை என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு இங்குள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ரவுடி கும்பலை சேர்ந்த சில நபர்கள் மது வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க ஊழியர்கள் மறுத்ததால், மதுப்பாட்டிலை உடைத்து ரவுடி கும்பல் சம்பவ இடத்தில் அட்டகாசம் செய்துள்ளனர். இதனால், உயிருக்கு பயந்து டாஸ்மாக் ஊழியர்கள், அவசர அவசரமாக கடை ஷட்டரை இழுத்து மூடினர். பிறகு, அருகில் உள்ள கடை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அனைத்து ஊழியர்களும் ஒன்றுகூடி சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதற்கிடையில் புகாரை வாங்க காவல்துறையினர் மறுத்ததால், இரு தரப்புக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டாஸ்மாக் ஊழியர்களின் புகார் மீது கவனம் செலுத்தாமல் ரவுடி கும்பலை காப்பாற்றும் நோக்கத்துடன் காவல்துறையினர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், அடுத்தடுத்து வேலூரில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சில நிமிடங்களில் 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு ஊழியர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசந்தகுமாரிடம் ஊழியர்கள் முறையிட்டனர். ரவுடியின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டாவிட்டால் கடையை திறக்க மாட்டோம் என்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடையில் ரவுடிகள் அட்டகாசம்!

பின்னர், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி ஊழியர்களுடன் டாஸ்மாக் மேலாளர் வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு ஊழியர்களை அழைத்துக் கொண்டு வேலூர் வடக்கு காவல் நிலைத்தில் வசந்தகுமார் புகார் அளிக்கச் சென்றார். மேலாளரின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு ஊழியர்கள் கடைக்கு திரும்ப முடிவு செய்தனர். இதற்கிடையில் இந்த பிரச்னை காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வேலூரில் 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.

பின்னர், பிரச்னை முடிந்து ஊழியர்கள் இரவு 9 மணி அளவில் கடையை திறக்க வந்தனர். இதைக் கண்டதும் குடிமகன்கள் உற்சாக மிகுதியில் மதுபானங்களை வாங்க முண்டியடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் வேலூரில் நேற்றிரவு பெரும் பரபரப்பு நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details