வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள 11 இடங்களில், ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயண நினைவு மூலம் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வருகை தந்து கொடியேற்று வைத்தார். அவரை கட்சி சார்பில் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
முதலாவதாக மாமுண்டூர் பகுதியில் கட்சி கொடியேற்றிய பின்னர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் களத்தில் ராகுல் காந்தியை நேரடியாக சந்திக்க பயப்படுவதால் அவதூறு வழக்கை பயன்படுத்தி அவரை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:மீண்டும் சுற்றுலா பயணிகளுடன் களைகட்டிய சுருளி அருவி : சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்கிய வனத்துறை
காங்கிரஸ் கட்சிக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு சாதகமான தீர்ப்பு நிச்சயம் வரும் என உறுதிபட தெரிவித்தார். தமிழகத்தில் ஆளுநர் ஆளும் திமுக அரசிற்கு எதிராக தனது கருத்தை பேசிவிட்டு அறிக்கையாக வெளியிட்டு விட்டு பின்னர் அதனை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், இதன் மூலம் ஆளுநர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக விமர்சித்தார்.