தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததற்கு தமிழக அரசே பொறுப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு! - அண்ணாமலை குற்றச்சாட்டு

வேலூரில் அணைக்கட்டு அருகே மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

TamilNadu
பாம்பு

By

Published : May 29, 2023, 1:17 PM IST

வேலூர்:வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அத்திரமத்து கொல்லை என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான விஜி- பிரியா தம்பதியினருக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. இவர்கள் நேற்றிரவு (மே.28) தங்களது குழந்தையுடன் வீட்டின் முன்பு உறங்கியுள்ளனர். அப்போது, குழந்தையை பாம்பு கடித்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர், பாம்பு கடித்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, குழந்தையை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், சரியான சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு செல்வதற்குள் விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை இறந்துவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாம்பு கடித்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசே பொறுப்பு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதவிட்டுள்ள அவர், "வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் மலை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, பாம்பு கடித்து, சரியான சாலை வசதி இல்லாததால், சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடியாததால் மரணமடைந்துவிட்ட செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கையில், இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது?

சரியான சாலை வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல முடியாததால் ஒரு குழந்தை இறப்பு என்பதைச் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு பத்து கிலோமீட்டர் தொலைவிற்குக் குழந்தையின் பெற்றோர் நடக்க நேர்ந்தது அதை விடக் கொடுமையானது. யாருக்குமே வரக்கூடாத துயரத்தின் உச்சம் இது.

ஏற்கனவே, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது போல, தற்போது மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் பயன்படுத்தாமல் என்ன செய்கிறது தமிழக அரசு?

இந்தச் சிறு பெண் குழந்தையின் இறப்புக்கு, தமிழக அரசே முழு பொறுப்பு. தமிழக அரசின் புறக்கணிப்பால் இனியும் ஒரு இழப்பு ஏற்படாமல், தமிழகம் முழுவதும் சரியான சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கான சாலைகளை உடனே அமைக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் சாலைப் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சாலை வசதி இல்லை.. 10 கி.மீ குழந்தை சடலத்தை சுமந்த பெற்றோர்.. வேலூரில் நிகழ்ந்த அவலம்!

ABOUT THE AUTHOR

...view details