வேலூர்:பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி, குளவிமேடு உள்ளிட்டப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்தும், மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறதா என்பது குறித்தும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஓட்டேரி அருகே உள்ள சாலை சந்திப்பில் பள்ளி மாணவி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணண் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த மாணவி தன்னுடைய பெயர் சினேகா என்றும், வேலப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வீட்டுக்கு அழைத்து செல்ல யாரும் வராததால் இங்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைக்கேட்ட ராஜேஷ் கண்ணன், மாணவியை தனது காரில் அமர வைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளவிமேட்டில் உள்ள அந்த மாணவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரது பெற்றோரை வரவழைத்து மாணவியை இறக்கிவிட்டுள்ளார். வீட்டில் வேலை இருந்ததால் மாணவியினை அழைக்க தாமதமானதாக பெற்றோர் கூறியுள்ளனர். மேலும் மாணவிகளை இதுபோன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தினார்.