வேலூர்: திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள ஒருசில இடங்களில் இன்று (டிச. 8) காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு 3.1 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது. அந்த வையில் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பகுதிகளிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலும் இன்று (டிச 8 வெள்ளிக்கிழமை) காலை 7.39 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் உணர்ந்து உள்ளனர்.
மேலும் சில விநாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் பொது மக்கள் அச்சமடைந்த நிலையில் அவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர். ஆனால் அதிஷ்டவசமாக இந்த அதிர்வால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளிலும் மற்றும் ஆம்பூர், வாணியம்பாடியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. மேலும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளிலும் நில அதிர்வு காணப்பட்டது.
இதேபோல், செங்கல்பட்டிலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. எனினும், இந்த நில அதிர்வினால் எந்தவித பாதிப்பும் கிடையாது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. இதனால் சேதாரங்களும் ஏற்படவில்லை. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இயற்கையையும் விட்டு வைக்காத மிக்ஜாம் புயல்; பாதிக்கப்படும் பள்ளிக்கரணை..! வில்லனாகும் வீராங்கல் ஓடை!