ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் புதிதாக திறக்கப்படவிருந்த மதுபானக்கடையை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுபானக் கடை முன்பே சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டப்பட்டு, மதுக்கடையை திறக்க கூடாது என அதிகாரிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலவை அடுத்த முள்ளுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்காடு - செய்யாறு செல்லும் சாலை அருகே சதீஷ் என்பவற்கு சொந்தமான கட்டிடத்தில் புதிதாக அரசு மதுபானக்கடை இன்று(டிச.20) திறக்கப்படவிருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மதுபான கடையை திறப்பதாக தகவல் அறிந்த மதுப்பிரியர்கள் மதுவை வாங்குவதற்காக குவிந்ததால், மதுப்பிரியர்கள் மற்றும் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடியவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவியது.
இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு, ஆற்காடு வட்டாட்சியர் மற்றும் கலவை காவல் துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் சமரச பேச்சிற்கு இணங்கி இரு தரப்பினரும் சமரசம் அடைந்தனர். இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது, மதுபான கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வழக்கத்திற்கு மாறாக மதுபான கடையின் முன்பு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து மதுபான கடையை இப்பகுதியில் திறக்க கூடாது என ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர், வார்டு உறுப்பினர்கள் உட்பட கிராம மக்கள் அனைவரின் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த தீர்மானத்தை இதோடு நிறுத்திவிடாமல், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுச் சென்று மதுபான கடையை அப்பகுதியில் திறக்க விடாமல் நடவடிக்கை எடுக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தேவி பாரதியின் 'நீர்வழிப் படூஉம்' தமிழ் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது!