தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஐடி வளாகத்தில் சித்த மருத்துவச் சிகிச்சை பிரிவு!

வேலூர்: கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு, இயற்கை சூழலில் சிகிச்சையளிக்கும் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு விஐடி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

Siddha Medical Unit
சித்த மருத்துவச் சிகிச்சை பிரிவு

By

Published : Apr 26, 2021, 10:31 PM IST

வேலூர் மாவட்டம், விஐடியில் கரோனா சிகிச்சை மையம் (Covid Care Centre) இயங்கி வருகிறது. இங்கு, இன்று (ஏப்.26) முதல் சித்த மருத்துவ முறையிலான சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, சித்த மருத்துவ வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடிப்பது, சித்த மருத்துவ மூலிகைகள், சித்த மருந்துகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பதாகைகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகள் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்வதற்கு, மண்பானையில் சீரக தண்ணீர், வெட்டிவேர் நீர், சோம்பு தண்ணீர், ஓமத்தீநீர், மூலிகைத் தேநீர் உள்ளிட்டவை இங்குள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் குறிகுணங்கள் குறைவதற்கு ஏற்கனவே தந்தை பெரியார் கோவிட் சென்டரில் ஆய்வு செய்யப்பட்ட சித்த மருந்துகள், யோகாசன பயிற்சி, தியானப் பயிற்சி நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

குறிகுணங்கள் குறைப்பதற்காக, நீராவி இயந்திரத்தை கொண்டு ஆவி பிடித்தல் செய்யக்கூடிய முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருநீற்றுபச்சிலை தைலம், யூக்கலிப்டஸ் தைலம் விடப்பட்டு நோயாளிகளுக்கு ஆவிப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மஞ்சள் திரி புகை, வசம்பு காப்புக்கயிறு, மஞ்சள்தூள் உப்புக்கல்லை நீருடன் கலந்து வாய் கொப்பளித்தல், மூலிகை தூபம் ஆகிய இயற்கை முறையிலான சிகிச்சைகளும் அளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய எட்டு வடிவ (8 - Shaped) நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பம்சங்கள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை விஐடி வளாகத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா இன்று(ஏப்.26) தொடங்கிவைத்தார்.

கோவிட் சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் தில்லைவாணன், மருத்துவர்கள் வேல்விழி, வசீம், ரத்னா, சஞ்சய் காந்தி மற்றும் மருந்தாளுநர்கள் மகேஸ்வரன்,அசோகன், முருகன் ஆகியோர் நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details