நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு ராணிப்பேட்டை: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உட்கட்டமைப்பை வலுப்படுத்த, நிர்வாகிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் கலவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றுத் தர வேண்டும் என அரசு நினைக்கவில்லை. தண்ணீரை கொடுக்கக் கூடாது என்பது கர்நாடக அரசியல். அதனை பெற வேண்டும் என்பது தமிழக அரசியல்.
தேர்தல் நெருங்கும்போதுதான் இஸ்லாமியர்கள் மீதான பாசம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள், உடல் அளவில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்க வேண்டும். பாஜக அரசியல் என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரானது.
தற்போது மற்ற நாடுகள் ரயில்வே துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ள நிலையில், எதிரே வரும் ரயிலைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மோசமான நிலை இந்தியாவில் உள்ளது. அந்த அளவிற்கு ஊழியர்களும் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற சுதந்திர அமைப்புகள், தற்போது அரசியல் தலைவர்களின் கைவிரல்களாக மாறியுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனைகள் நடைபெறுகிறது. இவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. கடந்த மாதம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்து தற்போது வட மாவட்டத்தில் துவங்கியுள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கி, வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும். மேலும் சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டினை தான் ஏற்றுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் கருகி வரும் சம்பா பயிர்கள்.. நோயியியல் துறை பேராசிரியர் கூறும் அறிவுரை என்ன?