வேலூர்:பேரணாம்பட்டு அடுத்த மோட்டூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த கிராமத்தில் சாலை அமைப்பதற்காக இரண்டு மாதத்திற்கு முன்னர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை முழுவதும் ஜேசிபி இயந்திரம் மூலம் கொத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகளும், முதியவர்களும் என அனைவரும் சாலையில் செல்வதற்கு அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் அமிலா யுவராஜ் என்பவர், அருகே உள்ள கிராமத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருவதால், கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில் கால தாமதம் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலை அமைக்கும் பணி எடுத்துள்ள ஒப்பந்ததாரரும், பணிகளை ஆமை வேகத்தில் கூட செயல்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து புதிய சாலையை அமைத்து தர அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க:நீதிமன்ற அவமதிப்பு: 122 மனுதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவு!