வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த வாசு என்பவர், தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை, சத்துவாச்சாரியில் உள்ள ஜூனியர் குப்பண்ணா உணவகத்தில் நேற்று (நவம்பர் 18) நடத்தினார். அப்போது, பரிமாறப்பட்ட உணவில் உடைந்த டியூப்லைட்டின் (Tube light) கண்ணாடித் துகள்கள் இருந்தன. இது குறித்து, சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் மணப்பெண்ணின் சகோதரர் புகார் அளித்திருந்தார்.
உணவில் கண்ணாடி துகள்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்; உணவு பாதுகப்பு துறையினர் சோதனை
வேலூர்: நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துகள்கள் இருந்ததை தொடர்ந்து, ஜூனியர் குப்பண்ணா உணவகத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இதையடுத்து, வேலுர் ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின் பேரில், நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எஸ்பி சுரேஷ் தலைமையிலான குழுவினர், ஜூனியர் குப்பண்ணா உணவகத்தில் இன்று (நவம்பர் 19) சோதனை நடத்தினர். அப்போது, உணவகத்தில் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். மேலும், உணவில் கண்ணாடி துண்டுகள் இருந்தது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உணவகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எஸ்பி சுரேஷ் கூறுகையில், "ஆய்வின் போது காலாவதியான எண்ணெய், உணவு பொருள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ஸ்டோர் ரூமில்(Store Room) வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளோம்" என்றார். இதற்கிடையில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வேலூர் மாநகராட்சி சார்பில் உணவகத்தில் இருந்து ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.