வேலூரில் இன்று(ஜன. 19) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "மக்கள் விரோத விவசாய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை இயற்ற கோரியும் டெல்லியில் தொடர்ந்து இரண்டு மாத காலமாக விவசாயிகள் தொடர்ந்து அற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை சிறிதும் பொருட்படுத்தாத பிரதமர் தலைமையிலான பாஜக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவருகிறது. தமிழ்நாடு அரசு மாநில உரிமைகளை காக்காமல், மோடி அரசின் கட்டுப்பாட்டில் பொம்மலாட்ட அரசாக உள்ளது என்றார்.
அமைச்சர் சொங்கோட்டையன் அந்நிய சக்திகளுக்கு இடம் இல்லை என்று கூறியது குறித்து பதிலளித்த திருமாவளவன், "அப்படி சொல்வது உண்மை என்றால் பாஜகவினருடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்றார்.
எல்லை பிரச்னை
சமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீனா ஆக்கிரமித்து வீடுகள் கட்டியது குறித்து எழுப்பிய கேள்விக்க பதிலளித்த அவர், "மத்திய அரசு எல்லையோர பிரச்னைகளை பதற்றமாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை செயல்திட்டமாக கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் அவர்களுக்கு அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று கருதுகிறார்களோ அப்போதெல்லாம் எல்லையோரத்தில் பதற்றம் நிலவுவதாக காட்டி கொள்வதற்கு அவர்களுக்கு இந்த பிரச்னை தேவைப்படுகிறது. சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்பதைவிட எல்லைகளை பதற்றமாக வைத்திருப்பது பாஜகவிற்கு அரசியல் ஆதாயத்திற்கு உதவும் என்று நம்புகின்றனர்" என்று பதிலளித்தார்.
இதனையடுத்து சசிகலா விடுதலை குறித்து பேசிய அவர், "அதிமுகவில் இருந்து சசிகலாவை வெளியேற்றிவிட்டனர். இருப்பினும் அவரது விடுதலை அதிமுகவில் எந்த மாதிரியான சலசலப்பை ஏற்படுத்தும் என்று ஊகிக்க இயலவில்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களின் குரல் சசிகலாவிற்கு ஆதரவாக எழ தொடங்கியுள்ளது என்று பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து பேசிய அவர், மூன்றாம் கட்ட பராசோதனையை முடிக்காமல் கரோனா (பாரத் பயோடெக்) தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது ஏன்? அவர்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி அரசு செயல்பட்டுள்ளது. நாட்டு மக்களை பரிசோதனை எலிகளாக மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. கோவாக்சினை பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்கின்ற நல்ல காரியம் என்றார்.
வன்னியர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வேண்டி பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டம் நடத்தி வருவது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், "அவரது சமுதாயத்தை அவரே வெளிப்படையாக ஏமாற்றுகிறார். நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒரு சூழலில் தன்னை நம்பும் சமுதாயத்தை ஏமாற்றும் வேலையை ராமதாஸ் செய்து வருகிறார். இந்த போராட்டம் அரசியல் தேர்தல் பேரத்திற்காக நடத்தப்படுகிறது" என விமர்சித்தார்.