ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் வேலூரில் உள்ள சிறைகளில் வைத்து சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி, 'முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதிகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தற்போதைக்கு அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ஆம் ஆண்டு ஏழு பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 09 செப்டம்பர் 2018அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
இச்சூழலில் தற்போது உச்ச நீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் ஆளுநர் விடுதலை குறித்து முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் தமிழ்நாடு ஆளுநர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.