வேலூர் மாவட்டம் கத்தரிக்குப்பம் கிராமத்தில் கடந்த ஆறு மாத காலமாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்துப் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று கத்தரிக்குப்பம் கிராமத்துக்கு அருகே உள்ள ஏகாம்பரம் நல்லூர் கூட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'ஆறு மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை'- மக்கள் சாலை மறியல்
வேலூர்: ராணிப்பேட்டை அருகே கத்தரி குப்பம் கிராமத்திற்கு ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் ராணிப்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு கோரி பொதுமக்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உடனடியாக பிரச்னை சரி செய்யப்பட்டு கத்தரிக்குப்பம் கிராமத்திற்கு முறையாகக் குடிநீர் வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.