தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தமிழ்நாடு அரசு, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் உபரி நீரை ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை துவங்க உத்தரவிட்டது.
அதன்படி ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கர குப்பம் என்ற இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீரை கொண்டுவருவது பற்றி அலுவலர்கள், குடிநீர் வாரிய அலுவலர்கள், ரயில்வே அலுவலர்கள், பொறியாளர்கள் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தினர். நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது. எனவே தண்ணீர் கொண்டுவர ராட்சத குழாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்காக தமிழ்நாடு அரசு ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து ராட்சத குழாய்களை வாங்கியது. இந்த குழாய்கள் அனைத்தும் ஜோலார்பேட்டையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று குழாய்கள் பதிப்பதற்காக பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் துவங்க முடிவானது. ஆனால், ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அலுவலர்களிடம் கேட்ட போது, "பொது மக்களின் தண்ணீர் பிரச்னை தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் தண்ணீர் எடுத்து வரக் கூடிய சாத்தியக் கூறுகளை தமிழ்நாடு அரசுதான் செய்து முடிக்க வேண்டும். அவர்கள் அனைத்து பணிகளையும் முடிக்கும் பட்சத்தில் உடனடியாக ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டுமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு இன்னும் உறுதி செய்யவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் இந்த பணிகளை நேற்று பார்வையிட்டார். அப்போது, ரயில்வே அலுவலர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீர்த்தேக்கத் தொட்டியில் மட்டும் ஆய்வு மேற்கொண்ட பின், சென்றுவிட்டார். இது போன்று காரணங்களால் பணிகள் முடங்கி கிடக்கிறது. எனவே சென்னை மக்களின் நலன் கருதி அலுவலர்கள் ஒன்றிணைந்து உடனடியாக இந்த பணிகளை துவக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டையில் குழாய் பதிப்பதில் சிக்கல்