விசாரணைக் கைதியான கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்! - கர்ப்பிணிப் பெண் தப்பியோட்டம்
வேலூர்: பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(35). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஜனவரி மாதம், கணவரைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இவரை ஆரணி நகர காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ், ஜூலை 4ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் ஜூலை 7ஆம் தேதி விசாரணைக் கைதியாக வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து கர்ப்பிணியான கிருஷ்ணவேணி பிரசவத்திற்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சையில் இருந்த கிருஷ்ணவேணி இன்று (ஜூலை 11) காலை, தனது சிறைப் புடவையை மாற்றிக்கொண்டு திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறைத் துறைக் காவலர்கள் தப்பியோடிய பெண் விசாரணைக் கைதியைத் தேடி வருகின்றனர்.