வேலூரில் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்ச மரக்கன்றுகள் நடும் விழா! வேலூர்:தமிழ்நாடுஊரக வளர்ச்சித் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஜூலை ஒரு மாத காலத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் கணியம்பாடி ஒன்றியம், காட்டுப்புத்தூர் கிராமத்தில் தொடங்கி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து அனைத்து ஒன்றியங்களிலும் மரக்கன்று நடவு செய்யும் திட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதன்படி, முதல் நாளில் கணியம்பாடி ஒன்றியத்தில் சுமார் 2,840 மரக்கன்றுகளும், வேலூர் ஒன்றியத்தில் 300 மரக்கன்றுகளும், காட்பாடி ஒன்றியத்தில் 350 மரக்கன்றுகளும், அணைக்கட்டு ஒன்றியத்தில் 280 மரக்கன்றுகளும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 200 மரக்கன்றுகளும், குடியாத்தம் ஒன்றியத்தில் 500 மரக்கன்றுகளும், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 1,500 மரக்கன்றுகளும் என மொத்தம் 5,970 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இதையும் படிங்க:3 நாட்களுக்குள் தென்பெண்னை ஆற்றுநீர் சிக்கலுக்கான தீர்ப்பாயம்: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கர்நாடக அரசு!
தொடர்ந்து இந்த திட்டத்தின் படி வேலூர் ஒன்றியத்தில் 5,000 மரக்கன்றுகளும், காட்பாடி ஒன்றியத்தில் 19,000 மரக்கன்றுகளும், அணைக்கட்டு ஒன்றியத்தில் 23,800 மரக்கன்றுகளும், கணியம்பாடி ஒன்றியத்தில் 11,200 மரக்கன்றுகளும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 18,200 மரக்கன்றுகளும், குடியாத்தம் ஒன்றியத்தில் 23,300 மரக்கன்றுகளும் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 11,200 மரக்கன்றுகள் ஆகும்.
வேலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் ஜூலை மாதத்திற்குள் நடவு பட உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக மரக்கன்றுகளை நடவு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார். இந்நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து மரக்கன்றுகளையும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, வேலூர் ஒன்றியக் குழு தலைவர் அமுதா ஞானசேகரன், கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், வேலூர் வட்டாட்சியர் செந்தில், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்ற கருணாநிதியின் சொல்லிற்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:அணையில் மூழ்கிய பழங்கால கோயில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு - தரிசனம் செய்ய குவியும் பக்தர்கள்