தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வலியுறுத்தி வணிகர்கள் ஆர்ப்பாட்டம்! - ஆன்லைன் வணிகம்

திருப்பத்தூர்: ஆன்லைன் வர்த்தகத்தால் காலம் காலமாக வணிகம் செய்துவந்தவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து போராட்டம்
ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து போராட்டம்

By

Published : Dec 18, 2019, 3:27 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இந்திய அளவில் செயல்படும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பாரம்பரியமாக வணிகம் செய்துவந்த வணிகர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் வணிகத்துக்கு எதிராக திருப்பத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வணிகர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தைக் கண்டித்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ள ஆன்லைன் வணிகத் தளங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட், மண்டி போன்ற தளங்களை மத்திய, மாநில அரசுகள் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் வணிக நிறுவனத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

மேலும், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில், இந்திய தொழில் வணிகத்தை முற்றிலும் முடக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் மனோகரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கோவையில் ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தேனியில் அமேசான், ஃப்ளிப்கார்ட், வால்மார்ட், மண்டி போன்ற இணையதள வர்த்தகத்தால் சிறு-குறு வணிகர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இதில், இணையதள வர்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தடை செய்ய வேண்டும், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

நாமக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் அமேசான், ஃப்ளிப்கார்ட், வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள் தொழில் வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதால் இதனைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா சாலையில், மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: ஆன்லைன் விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும் - வணிகர்கள் வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details