வேலூர் மயான கொள்ளை: ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் பேசி தாக்குதலா? வேலூர்: வேலூர் அருகே பல பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா இன்று (பிப்.20) வெகு விமர்சையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆட்டம் பாட்டத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, திருவிழா கூட்டத்திற்குள் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்த சில இளைஞர்களை, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இதனிடையே, அங்கிருந்த இளைஞர்களை ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் பேசி தாக்கியதாகக் காவல் ஆய்வாளர் கருணாகரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் ஓல்ட் டவுன், தோட்டப்பாளையம், அருகதம்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாசி மாதம் தோறும் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை திருவிழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனை அடுத்து அசம்பாவிதங்கள் தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் சாமி ஊர்வலத்தின்போது, இளைஞர்கள் ஆடி பாடி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் திடீரென அவர்களைத் தடுத்து நிறுத்தி ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக சொல்லப்படுகிறது. அதோடு தடியடி நடத்திய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், இளைஞர்களை ஜாதி பெயரைச் சொல்லித் திட்டிய காவல் ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் கோலாகலமாக நடந்த மயானக் கொள்ளை திருவிழா!