வேலூர்:தமிழகத்தில்வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டைகள் நிரம்பியதோடு, தாழ்வான பகுதிகள் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன.
மேலும், மலைப்பகுதிகளில் நீரூற்று ஏற்பட்டு, நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, காட்பாடியை அடுத்த மேல்பாடி அருகிலுள்ள தேன்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்பட்டு இருந்த விளை நிலங்களில் தொடர் கனமழையால் அதிகளவில் மழைநீர் தேங்கியது.
இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்து, அழுகிய நிலையில் காணப்படுகின்றன. மேலும், நெற்பயிர்கள் அறுவடை செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:ஆசிரியை, ஆசிரியர் மாயம்.. ரத்தக் கறையுடன் நின்ற கார்.. கோவையில் நடந்தது என்ன?
இதுகுறித்து, அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், "இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலானோர் கடன் வாங்கித்தான் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வயல்வெளி முழுவதும் தண்ணீர் நிரம்பியதன் காரணமாக, நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகியுள்ளன.
இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சேதமடைந்த நெற்பயிர்களை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழையால் விளை நிலங்களில் தேங்கிய மழைநீரால், பயிர்கள் அழுகி நிலையில் காணப்படுகின்றன.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையொட்டி, அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் சேதமடைந்ததாகவும், இதனால் தங்களில் வாழ்வாதாரம் மிகுதியாக பாதிகப்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், அரசு தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை கணக்கிட்டு தங்களுக்கான உரிய நிவாரணத்தை பெற்றுத் தர வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:"தமிழிசை இருக்கும் இடத்தில் தமிழுக்கு எதிராக எதுவும் வராது" - திருவண்ணாமலையில் ஆளுநர் தமிழிசை பேட்டி