வேலூரில் களைகட்டிய புத்தாண்டு வேலூர்: ஆங்கில புத்தாண்டு 2024 தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் பிரபல தனியார் ஹோட்டல்களில் ஆடல் பாடல்களுடன் புத்தாண்டை வரவேற்றனர். வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் ஆலயத்தில் இன்று ஆங்கில புத்தாண்டு 2024ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் நடைபெற்றது.
இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண மலர்கள் நவதானியங்களை கொண்டு மகாலஷ்மி கோலமிட்டு வழிபாடுகள் செய்தனர். இதே போன்று கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவித்து, மகாதீபாராதனைகளும் செய்தனர். பக்தர்கள் புத்தாண்டு நல்ல துவக்கமாக அமைய வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இரவு 9 மணி முதல் வேலூர் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் சுமார் 940 மேற்பட்டோர் சோதனை சாவடிகள் அமைத்து பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் விதிமுறையை மீறி சாலையில் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் அத்துமீறும் வாகனங்களை பறிமுதல் செய்து ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பொதுமக்களுடன் இணைந்து ஆங்கில புத்தாண்டு பிறந்ததை கொண்டாடும் வகையில் பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள், சாலை வழியாக வந்த மக்கள் பேருந்து ஓட்டுனர்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைவருடன் இணைந்து சாலையில் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக காவலர்களுடனும், பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.3 கோடி அளவிலான திருடுபோன பொருட்கள் மீட்பு.. வேலூர் சரக காவல் துணைத் தலைவர் பெருமிதம்!