வேலூர்: இந்தியாவின் பழம்பெரும் வைத்திய முறைகளில் ஒன்று தமிழர்களின் சித்த மருத்துவ முறை. பக்கவிளைவுகளற்ற இந்த மருத்துவ முறையை இந்தியாவில், கரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டபோது, அதிலிருந்து தற்காத்துக் கொள்ள சித்த மருத்துவர்கள் கபசுரக் குடிநீரை பரிந்துரை செய்தனர்.
இதன் பயனை அறிந்துகொண்ட ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீரை ஆங்கில மருந்துகளோடு சேர்த்து அளிக்குமாறு அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்தது.
சித்த மருத்துவத்தின் வீரியம்
கரோனா நோய்த்தொற்றுக்குரிய அறிகுறிகளுக்கு ஏற்ப சித்த மருத்துவத்தில் எந்த மருந்துகளை பயன்படுத்துவது, அதன்மூலம் நோயாளிகளை குணப்படுத்துவது சாத்தியமா என்ற அடிப்படையில் எந்த உறுதியான முடிவுகளும் இல்லாத நிலையில், ஆங்கில மருந்துகளோடு சித்த மருந்துகளும் வழங்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இது ஒருபுறமிருக்க வேலூரில் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் அலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சித்த மருத்துவ மருந்துகளின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து வேலூர் அரசு சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன் முதன்மை ஆராய்ச்சியாளராக இருந்து ஒரு குழுவுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
கரோனா முதல் அலையில் கிளினிக்கல் ட்ரையல் ரிஜிஸ்டரி ஆஃப் இந்தியாவின் (Clinical Trial Registry of India) அனுமதியுடன், வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று அறிகுறிகள் உடைய மற்றும் கரோனா அறிகுறியில்லாத 20 நோயாளிகள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நோயாளிகளின் ஒப்புதலோடு தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், சித்த மருந்துகளின் செயல்திறன் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் பிரத்தியேகமாக சித்த மருத்துவ மருந்துகளை வைத்து மட்டும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
என்னென்ன மருந்துகள்?
இந்த 20 பேரில் இருவர் ஐ.எல்.ஐ (ILI) எனப்படும் Influenza like illness உடையவர்களாக இருந்தனர். மீதம் இருந்தவர்கள் 18 பேர் லேசான அறிகுறிகள் உடையவர்கள் மற்றும் கரோனா அறிகுறிகளற்றவர்கள். இவர்களுக்கு ஏழு நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கபசுரக் குடிநீர், ஆடாதொடை மனப்பாகு, அமுக்கரா சூரணம் மாத்திரை, தாளிசாதி மாத்திரை, பிரம்மானந்த பைரவம் மாத்திரை ஆகிய ஐந்து மருந்துகள் ஆராய்ச்சியின்போது நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. ஏழாவது நாளில் கல்லீரல் மற்றும் சீறுநீரக பரிசோதனைகள் (Renal Function Test and Liver function test) ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.