தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நான் 29 வருஷமா நிலாவையும் நட்சத்திரத்தையும் பார்க்கலை" - தாயிடம்  கலங்கிய நளினி! - ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு

வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, 51 நாட்கள் பரோல் முடிந்து இன்று பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நளினியை விரைந்து விடுதலை செய்யவேண்டும் என அவரது தாயார் பத்மா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நளினியின் தாயார் பத்மா கண்ணீருடன் பேட்டி

By

Published : Sep 15, 2019, 9:49 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, 51 நாட்கள் பரோலில் வெளிவந்தார். தற்போது அது முடிந்து இன்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், இதுகுறித்து நளினியின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது மகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தேன். அவளை மகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்து அரவணைத்து முத்தம் கொடுத்து அழைத்துச் சென்றேன். எனது மகள் 29 ஆண்டுகளாக ரணபட்டு கொண்டிருக்கிறாள். 29 வருடமாக நிலாவையும் நட்சத்திரத்தைப் பார்க்கமுடியாத சூழலில் இருக்கிறாள். குறிப்பாக, அவள் குழந்தையைப் பார்க்க முடியாமல், குழந்தையிடம் பேச முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறாள். இந்த 51 நாட்களில் அவளை நான் குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டேன்.

நளினியின் தாயார் பத்மா கண்ணீருடன் பேட்டி

நளினியின் மகள், படிப்பின் காரணமாக லண்டனில் இருந்து வர முடியவில்லை. அவளுக்கு தற்போது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. எனது மகள் நளினி 2 ஆயுள் தண்டனையை தாண்டிவிட்டார். எனவே, கருணையோடு இந்த அரசாங்கம் அவரை விடுதலை செய்ய வேண்டும். எனக்கும் 80 வயதாகிவிட்டது. எனவே இந்த அரசு தயவு செய்து நீதிமன்றம் மூலமோ அல்லது தாங்களாகவே முடிவு எடுத்து எனது மகளுக்கும் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என கூறினார்.

'எனது மகள் அனுபவித்த கஷ்டம் போதும். இனி அவள் நல்ல முறையில் வாழ்வார். எனது மகளும் அவள் குடும்பமும் தீவிரவாதத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவள் காதலால் கெட்டுப் போனவள். எனது பேத்திக்கு இன்னும் திருமணம் நிச்சயமாகாததால் நாங்கள் மீண்டும் பரோல் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

நளினி பிறந்த போது எந்த பாசத்துடன் இருந்தேனோ, அதே பாசத்துடன் தான் இந்த 51 நாட்களும் அவளை பார்த்துக்கொண்டேன். இன்று அவர் சிறை செல்லும்போது எல்லோரும் சேர்ந்து கட்டி அணைத்துக்கொண்டு அழுதோம்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details