நான்கு மாதங்களுக்கு பின் நளினி - முருகன் சந்திப்பு
வேலூர்: நான்கு மாதங்களுக்குப் பிறகு நளினி, முருகன் ஆகியோர் சிறையில் நேரில் சந்தித்துக் கொண்டனர். இவர்களின் இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்றுவரும் கணவன் மனைவியான நளினி, முருகன் நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க சிறைத்துறை தடை விதித்திருந்தது.
இந்த தடை ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் விலக்கப்பட்டு கைதிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு நளினி, முருகன் ஆகியோர் சந்திப்பு இன்று (ஆக 21) நேரில் நடைபெற்றது.
மத்திய சிறையில் உள்ள முருகன், பெண்கள் தனி சிறையில் உள்ள நளினியை பலத்த காவல் துறை பாதுகாப்புடன் நேரில் சென்று சந்தித்தார்.
இன்று (ஆகஸ்ட் 21) காலை 9:30 மணியிலிருந்து 10 மணிவரை 30 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் முருகன் மீண்டும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இடைப்பட்ட காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை இருவரும் காணொலி மூலம் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.