வேலூர்:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து முருகன் விடுதலையாகி இருந்த நிலையில், அவர் மீது நிலுவையில் இருந்த வேலூர் மத்திய சிறையில் பெண் காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 2020ஆம் ஆண்டு தொடரப்பட்டிருந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (எண் 4) முருகன் உட்பட இரண்டு பேரை இன்று (மே 19) விடுலை செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வந்த முருகன், உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2022 நவம்பர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், முருகன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர்மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் இருந்ததாலும் விடுதலைக்குப் பிறகு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
முருகன் வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, கடந்த 2020ஆம் ஆண்டு சிறையில் ஆய்வுக்குச் சென்ற பெண் காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தகாத முறையில் செயல்பட்டதாகவும் மத்திய சிறைத்துறை அளித்த புகாரின் பேரில் முருகன், மற்றொரு கைதியும் பிரபல ரௌடியுமான கேப்ரியல் ஆகியோர் மீது பாகாயம் போலீசார் 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.