வேலூர்:வேலூர் மாவட்டத்தில் மக்கள் காய்கறிகளைப் பெற ஏதுவாக 700 வாகனங்களின் மூலம் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் துரைமுருகன் இன்று(மே 26) ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வாணியர் வீதியின் ஜெயின் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி முகாமை அவர் பார்வையிட்டார். அங்கு அவர் பேசுகையில், "18 வயதுக்கும் மேற்பட்டோர்களுக்குத் தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கப்பட்டுளள்ளது. இம்மாவட்டத்தில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 54 பேர் தடுப்பூசி போடுவதற்குத் தகுதியானவர்களாக உள்ளனர்.
அவர்களில் இதுவரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 915 பேர்தான் தடுப்பூசி எடுத்துள்ளனர். பொதுமக்கள் பலர் அரசு வழங்கும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதனை செலுத்திக்கொண்டால் உயிர்போய்விடும் என அச்சப்படுகின்றனர். அது தவறானது. நானே இரண்டு தவணை தடுப்பூசி போட்டதால் தான், மீண்டும் என்னை கரோனா தாக்கிய போதும் உயிர்ப் பிழைத்தேன்.