Minister Durai Murugan Byte வேலூர்:திமுக சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுபினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், அணைக்கட்டு எம்.எல்,ஏவும் வேலூர் மாவட்ட செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜா, காட்பாடி தெற்கு பகுதி செயலாளரும், துணை மேயருமான சுனில்குமார் உட்பட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "வருகிற 17 ஆம் தேதி வேலூரில் திமுக பவளவிழா மற்றும் முப்பெரும் விழா நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா வேலூர் கோட்டையில் வரலாறு படைக்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அவருடைய கூற்றை மெய்பிக்கும் வகையில், விழாவிற்கு நிர்வாகிகள் திரளாக வர வேண்டும். நான் சாதாரண குடியானவன். 1954 ஆம் ஆண்டு என்னுடைய ஊரில் கட்சியை ஆரம்பித்தேன். அப்போது சத்தியவாணிமுத்து தான் வந்து கட்சியை தொடங்கி வைத்தார்.
எங்கள் ஊரில் சாலை வசதி கிடையாது, மின்சார வசதி கிடையாது, பள்ளிக்கூடம் கிடையாது. நான் தனியாக வந்து ஒவ்வொருவரின் கரங்களையும், கால்களையும் பிடித்து வளர்ந்து இன்று பொதுச் செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன். இது சாதாரணமானதல்ல. எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய பதவியும் அல்ல. அண்ணாவிற்கு பிறகு சம்பத், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மதியழகன் ஆசைதம்பி என பலர் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அண்ணா, நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் அடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக நான் உள்ளேன். இதுதான் திமுக. ஊரெல்லாம் மாநாடு, பொதுக்கூட்டம், கட்சிக் கூட்டங்கள் நடந்தால் நான் தான் தலைமை தாங்க வேண்டும். நான் பிறந்த ஊரிலேயே இருபெரும் விழா நடக்கிறது. அதற்கு நான் தலைமை தாங்க உள்ளேன். இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் எனக்கு தாய், தந்தை. உங்களை பவள விழா மற்றும் முப்பெரும் விழாவிற்கு பொதுச் செயலாளராக அழைக்கிறேன். திரண்டு வாருங்கள் என்றார்.
மேலும் நிகழ்ச்சி முடிவில் அமைச்சரிடம், காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், காவிரி ஆற்றின் பாசன வசதி பெறும் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு?, காவிரியில் தண்ணீர் வழங்க மாட்டோம் என நாங்களா கூறினோம்?. கர்நாடகா அரசு தண்ணீர் வழங்குவதை மறுக்கின்றது. கர்நாடகா அரசை கேட்டால் தண்ணீர் இல்லை என்று கூறுகிறார்கள். தற்போது தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்று கூறுவது உச்சநீதிமன்றம். எனவே வரும் 21 ஆம் தேதி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் என்றார்.
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி மீது 4,800 கோடி முறைகேடு என தமிழ்நாடு அரசு அப்பீல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு?, அது குறித்து எனக்கு தெரியாது என கூறிய அமைச்சர் துரைமுருகன் தனது பாணியில் சிரித்தபடியே சென்றார்.
மேலும் குடிமராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என கேட்டதற்கு?, குடிமராமத்து பணி என்றால் என்ன வென்றே எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது" என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜி வெளியே பேசினால் பலர் உள்ளே போவார்கள் - சீமான் அதிரடி