வேலூர்:சொத்துக்குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து உள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்தார்.
இதன்படி, 1996ஆம் ஆண்டு மே 13 முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான நாட்களை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை காலமாக எடுத்துக் கொண்டு, 2002ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.