வேலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மார்ச் 21ஆம் தேதி இரவில் 2 பேர் போதையில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
திடுக்கிடும் தகவல்: அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனியார் மருத்துவ மாணவியும் அவருடைய ஆண் நண்பரும் மார்ச் 16ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்துவிட்டு, மார்ச் 17ஆம் தேதி விடியற்காலை 1 மணியளவில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் ஏற்றிக்கொண்டுள்ளார். அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றுள்ளது. அப்பெண் அதைக்கேட்டபோது, அந்த ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் உள்பட 5 பேர் அப்பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர்.
பாலியல் வன்புணர்வு: அங்கு வைத்து அவர்களிடமிருந்த செல்போன்கள், ரூ.40,000 பணம், 2 சவரன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துள்ளனர். மேலும் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வும் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மார்ச் 18, 19, 20 ஆகிய நாள்களில் அமைதியாக 5 பேரும் இருந்துள்ளனர்.
பின்னர் மார்ச் 21ஆம் தேதி இரவில் அதில் 2 பேர் போதையில் பணத்தைப் பிரிக்க முயன்றபோது, ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அப்போது தான் சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் இந்தச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.