வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா (45). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வந்தது. பிரச்னை ஏற்படும் போதெல்லாம் பெங்களூருவில் உள்ள நிர்மலாவின் அண்ணனான நந்தகோபாலன் தீர்த்து வைத்துள்ளார். நேற்றைய முன்தினம் வழக்கம்போல் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தங்கையின் குடும்பப் பிரச்னையைத் தீர்க்க வந்த அண்ணன் கொலை! - man mudered by his brother in law in vellore
வேலூர்: தங்கையின் குடும்பப் பிரச்னையைத் தீர்க்க வந்த அண்ணனை அடியாட்கள் மூலம் அடித்து கொன்று தலைமறைவான தங்கையின் கணவருக்கு வலைவீசியுள்ள காவல்துறை கொலையில் தொடர்புடைய அடியாட்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மனமுடைந்த நிர்மலா பெங்களூருவில் உள்ள தனது அண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதை அறிந்த செல்வகணேஷ் அடியாட்களை வைத்து நிர்மலாவின் அண்ணனான நந்தகோபாலைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். நந்தகோபால் வேலூர் வந்து தங்கை கணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது தகராறு முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது. திட்டமிட்டபடி நந்தகோபாலை, செல்வகணேஷின் அடியாட்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். நிலைகுலைந்த நந்தகோபால் சுயநினைவின்றி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் சத்துவாச்சாரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததுடன் காயமடைந்தவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன், விக்னேஷ், கோடீஸ்வரன் ஆகிய மூவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள செல்வகணேஷ், அவரது தங்கை சாந்தி, ரவி ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர். தங்கையின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க வந்த அண்ணனை மைத்துனரே அடியாட்களை வைத்து கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.