வேலூர்:கர்நாடக மாநிலம், பெங்களூரு ராகவேந்திரா ரவுண்டான பகுதி ஜி.கே.குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகன் அல்பிசெரில்(40). இவர் தனது உறவினர்களுடன் பிருந்தாவன் விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து காட்பாடிக்கு வந்துள்ளார்.
காட்பாடி ரயில்நிலையம் வந்ததும் ரயிலிலிருந்து இறங்கிய அவர்கள், நடைமேடை 2ல் உள்ள மின்தூக்கி அருகே தாங்கள் கொண்டு வந்திருந்த பேக், பைகளுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதில் 5 பவுனில் தங்க பிரேஸ்லெட், 5.5 பவுனில் தங்கச்சங்கிலி, வளையல்கள், 3 பவுனில் தங்க நெக்லஸ், 4 பவுனில் மற்றொரு செயின், 14 கிராமில் தங்க மோதிரம், 10 கிராமில் மற்றொரு தங்க மோதிரம் என மொத்தம் 20.5 பவுன் தங்க நகைகள் இருந்ததாகவும், அவற்றின் மதிப்பு ரூ.8.20 லட்சம் எனவும் தெரிவித்து அல்பிசெரி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.