வேலூர்:அணைக்கட்டு வட்டம், அத்திக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் நிவேதிதா (18). இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனை உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019 டிசம்பர் 14ஆம் தேதி நிவேதிதா வழக்கம்போல் பணிக்குச் சென்றதாகவும், பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த நிவேதிதாவின் தாயார், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நிவேதிதாவைத் தேடி வந்தனர். அடுத்த 2 நாட்களுக்குப் பிறகு, புதுவசூர் கல்குவாரியில் நிவேதிதா சடலமாக கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார். மேலும், அப்பகுதியில் சோதனை செய்தபோது, சடலத்துக்கு சற்று தொலைவில் கிடந்த அவரது கைப்பேசியை போலீசார் கைப்பற்றினர். அதனை அடிப்படையாகக் கொண்டு, வேலூர் ரங்காபுரம் மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான பிரகாஷ் (28), நவீன்குமார் (24) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், நிவேதிதா வேலைக்காக ஆட்டோவில் அடிக்கடி சென்று வருவதும், அப்படி சென்று வரும்போது பிரகாஷ் உடன் பழக்கம் ஏற்பட்டதும், அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதைத் தொடர்ந்து, நிவேதிதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷை வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால் நிவேதிதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரகாஷ், தனது நண்பரான நவீன்குமாருடன் இணைந்து நிவேதிதாவை புதுவசூர் கல்குவாரிக்கு அழைத்துச் சென்று, குவாரியின் மேல்பகுதியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது.