வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா வேலூர்:புகழ்பெற்ற வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று தங்க கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்திபெற்ற வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவர் இல்லாத நிலை கடந்த 1981 மார்ச் 16ம் தேதி முடிவுக்கு வந்தது. 1982ம் ஆண்டு முறையான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அப்போது முதல் மக்களின் வழிபாட்டில் இருந்து வருகிறது. ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அன்றாட பூஜைகள், கும்பாபிஷேகம், திருவிழாக்கள் உட்பட அனைத்தையும் ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம் நடத்தி வருகிறது.
கோயிலுக்கு ஏற்கனவே தங்கத்தேர், கொடிமரம் என அனைத்தும் தற்போது முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இக்கோயிலுக்கு ரூ.5 கோடி தனியார் நன்கொடையில் 25 அடி உயர தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடிமரத்துக்கும் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. தங்கத்தேர் பிரதிஷ்டை மற்றும் கோயிலின் 4வது மகா கும்பாபிஷேக விழா இன்று (25ம் தேதி) காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெற்றது.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மனநலம் பாதித்த பக்தரை தாக்கிய தீட்சிதர்கள் - சிசிடிவி வெளியீடு!
இதற்காக கடந்த 21ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன், சிறப்பு ஹோமங்கள் நடந்து வந்தது. அதனைத் தொடர்ந்து
புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள், மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாகசாலையில் வைத்து முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பிரமாண்ட யாக சாலையில் 54 யாக குண்டங்கள் அமைத்து, 170-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் 4 கால யாகங்கள் நடத்தி, பெரிய கலசங்கள் 150, சிறிய கலசங்கள் 1,120 வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. கோயிலில் உள்ள ராஜகோபுரம் உட்பட ஆறு கோபுரங்களிலும் தங்கக் கலசங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
அரியூர் தங்க கோயில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் மகாதேவமலை விபூதி சாமியார் உட்படப் பல்வேறு சிவனடியார்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். கும்பாபிஷேகத்தின்போது கோயில் கோபுரத்தின் மேல் பறவைகள் சுற்றியதைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
கும்பாபிஷேகத்தை காஞ்சிபுரம் கே.ராஜப்பா சிவச்சாரியார், மாயவரம் சிவபுரம் வேத பாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் 175 சிவச்சாரியார்கள் செய்து வைத்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி 40,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார் என 550 பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். இதுதவிர சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நவதானிய அலங்காரத்தில் தஞ்சை பெரிய கோயில் மஹா வாராஹி அம்மன்