வேலூரில் அஞ்சல் ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்! வேலூர்: வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் அகில இந்தியக் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று (டிச.12) நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்குதல், கிராமிய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குதல், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து விதமான அடக்கு முறைகளையும் நிறுத்துதல், கிளை அஞ்சலகங்களுக்கு லேப்டாப், பிரிண்டர் அதிவேக இணையச் சேவை போன்றவற்றை வழங்கி சேவை தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய AIGDSU (ALL INDIA GRAMIN DAK SEVAKS UNION) மாநில தலைவர் v.முனிரத்தினம், "அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கமும், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கமும் இணைந்து இன்று (டிச.12) 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய காலவரையற்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கமல சபா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை நிலுவையில் வைத்துக்கொண்டு எங்கள் கோரிக்கையை அமல்படுத்தாமல், காலதாமதப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், ஜிடிஎஸ் ஊழியர்கள் அனைவரும் 8 மணி நேரம் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் ஆக்க வேண்டும், ஜிடிஎஸ் ஊழியர்கள் அனைவருக்கும் க்ராஜ்பேட் தொகை ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட வேண்டும், இலக்கா ஊழியர்களைப் போல் 150 நாட்கள் விடுப்பு நாட்களைச் சேமித்து வைக்கவும் வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திரா பக்தர்கள் மீது தாக்குதல்; அண்ணாமலை கண்டனம்.. கோயில் நிர்வாகத்தின் விளக்கம் என்ன?