வேலூர் என்றதும் கோட்டை நினைவிற்கு வருகிறதோ இல்லையோ, முதலில் சுட்டெரிக்கும் வெயில் தான் நினைவிற்கு வரும். இங்கு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் வெப்பம் சதம் அடித்து சுமார் 110 பாரின்ஹீட்டை தாண்டும். வேலூர் மாவட்டத்தை சுற்றி உள்ள அதிகபடியான பாறைகளும், மரங்களற்ற மலைகளுமே இதற்கு பிரதான காரணியாக அமைகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏனைய ஊர்களைக் காட்டிலும் வேலூரில் வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும்.
தற்போது தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ளது. சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் உச்சத்தை அடையக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. கோடை காலம் தொடங்கியதும் வியர்குரு, வேனல்கட்டு, ஹைப்பர்தெர்மியா(Hyperthermia), சன்பர்ன்(Sunburn), உடலில் நீரிழப்பு (Dehydration) போன்ற பல்வேறு உடல் உபாதைகளால் மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளவது எப்படி என்பது குறித்து ஈடிவி பாரத்திற்கு மருத்துவர் நர்மதா பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "கடந்த சில மாதங்களாகவே குழந்தைகளுக்கு அதிக்கபடியான காய்ச்சல் உள்ளதாக பெற்றோர் அச்சம் கொள்கின்றனர். அவை வெயில் வெப்பத்தால் உடலில் ஏற்படும் அதிகபடியான சூடே தவிர, வேறொன்றும் இல்லை. இந்த சூட்டினால் சிறுநீர் குறைவாகவும், மஞ்சள் நிறத்திலும் வெளியாகும். இவை தெடர்ந்தால் சிறுநீரக தொற்று (Urinary Infection) ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எந்த பானம் சிறந்தது?
இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள பருவமடைந்தோர் ஒரு நாளைக்கு சுமார் நான்கு முதல் ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும், அதுவே குழந்தைகள் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை அதாவது சிறுநீர் கழிக்கும் அளவிற்கு தண்ணீர் பருகினாலை போதுமானது. வெறும் நீரினை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக இளநீர், பழச்சாறு(Fresh Juice) போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
செயற்கையான பழச்சாறுகளை அதிகம் அருந்துவதை தவிர்பது நல்லது. அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை தாகத்தை துண்டும். மோர், தயிர் ஆகியவை உடலுக்கும், வயிறுக்கும் நல்லது. வயிறு மற்றும் குடல் சார்ந்த தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
உணவகங்களை தவிருங்கள்
கோடை காலம் அல்லது குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் காலகட்டத்தில் உணவகங்களில் உணவு உண்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. இது போன்ற நேரங்களில் உணவகங்களில் சுகாதாரமான நீரை பயன்படுத்துகின்றனரா என்பது தெரியாது. அசுத்தமான குடிநீர் பயன்படுத்துவதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. வயிற்றுப் போக்கின் காரணமாக உடலில் உள்ள நீர் சத்து குறையும் வாய்ப்பும் உள்ளது. எனவே வீட்டில் சமைத்த பொருள்களையே உண்பது சிறந்தது. அதேபோல நீரை கொதிக்க வைத்து மீண்டும் குளிர்வித்து குடிப்பது மிகவும் நல்லது.
கோடைகால வெப்பம் - பாதுகாத்து கொள்வது எப்படி? குழந்தைகளை பராமரிப்பது எப்படி?
கோடை காலத்தில் வெப்பம் அதிகமாவதால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். இந்த காலகட்டங்களில் வீடுகளுக்கு கான்கிரீட் ஷீட் போடுவதை தவிர்த்து, தென்றங்கீற்றைப் பயன்படுத்தலாம். இது தேவையான குளிர்ச்சியை அளிக்கும். குழந்தைகள் உள்ள அறையில் அதிகம் மண் பானை வைத்தால் குளிர்ச்சியான சூழல் உறுவாகும். குழந்தைகளுக்கு ஆடம்பரமான உடைகளை அணிவிப்பைதைத் தவிர்த்து மெல்லிய காட்டன் உடை அணிவிக்க வேண்டும்.
வியர்குரு பவுடர் வேண்டாம்
குழந்தைகளின் தோல் மிகவும் மிருதுவானது. அது சுவாசிக்க இடமளிக்க வேண்டும். நாம் வியர்குரு பவுடர்(Prickly Heat Powder) போன்றவற்றை பயன்படுத்தினால் வியர்வை சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு வியர்குரு அதிகமாகும். எனவே இவற்றை முற்றிலுமாக தவிர்பது நல்லது. இதற்கு மாறாக குழந்தைகளை மிதமான சுடுநீரில் குளிக்க வைத்து மெல்லிய ஆடைகளை அணிவிக்கலாம். இது குழந்தைகளின் உடலை குளிர்ச்சியுடன் வைத்து வியர்குருவில் இருந்து காக்கும். மேலும் பெரியவர்களும் வியர்குரு பவுடர் நல்லது அல்ல என்று எச்சரிக்கிறார்.
கோடை வெயிலின் சூட்டினால் ஏற்படக்கூடிய பிரச்னைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இயற்கை நமக்கு பல்வேறு மருத்துகளையும், வழிமுறைகளையும் தந்துள்ளது. அவற்றின் உதவியுடன் இந்த கோடை வெயிலை வெற்றி கொள்வோம். இவற்றையும் தாண்டி நமக்கு நிழல் தரும் மரங்களை வெட்டாமல் பூமியை பாதுகாப்போம். எந்தளவிற்கு நம் பூமியை நாம் காக்கின்றோமோ அந்த அளவிற்கு அது நம்மை காப்பாற்றும்"என்று தெரிவித்தார்.