கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஏப். 24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து, ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், ’’தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகள் குறித்த முழு விவரத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும். கோவிட் கேர் சென்டர் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆக்சிஜன் இணைப்பு வசதிகொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளில் 300 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி இல்லை. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மே 3ஆம் தேதி நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 600 ஆக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்போது, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. அவற்றை மேலும் அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இணைப்பை அதிகப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள் அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே தற்போதைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை என அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளோம். ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்திடமும் கேட்டுள்ளோம்.