தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்டர்நெர் அழைப்புகள் மூலம் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஓசிஐயு (OCIU - Organised Crime Intelligence Unit) காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்களின் விசாரணையின் முடிவில் சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூரில் ஓசிஐயு குழுவினர் சோதனையில் ஈடுபடத் திட்டமிட்டனர்.
அதன்படி, வேலூர் சார்ப்பனாமேடு, கலாஸ்பாளையம் சஞ்சீவி பிள்ளை தெருவில் உள்ள வீடொன்றில் ஓசிஐயு மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் நள்ளிரவு 2 மணிக்கு, இந்த சோதனையைத் தொடங்கினர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற துறையினர், வீட்டில் இருந்த சிபியு, கம்பியூட்டர், இணையதள சேவை கருவிகளை பறிமுதல் செய்தனர்.
வீட்டில் குடியிருந்தவர் குறித்து அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் எனக்கூறி, கடந்த ஜனவரி மாதம் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்த அடையாளம் தெரியாத நபர், வீட்டில் இணைய வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். அதன் பிறகு அவர் எப்போது வந்து செல்வார் எனத் தெரியாது. வீட்டு வாடகையை வங்கிக்கணக்கு வழியாகவே செலுத்தியுள்ளார்.
மேலும் இணைய சேவையில் தடங்கல் ஏற்பட்டாலும், கணினியை மீண்டும் ஆன் செய்வதற்கு அருகே வசிக்கும் வீட்டில் இருப்பவர்களை செல்போனில் தொடர்புகொண்டு சரி செய்து கொடுக்கும்படி கூறுவார் என்றும் தெரியவந்தது. சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் ஆவணங்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் வீட்டின் உரிமையாளர் பாபுவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் கூறும்போது, "தமிழ்நாட்டின் நான்கு முக்கிய இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. வேலூரில் யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்புடைய நபர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யும் பணிக்காக இந்த நான்கு மையங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். ஹவாலா பணப்பரிமாற்றம், தீவிரவாத குழுக்கள், தேச விரோத குழுக்களுக்கு பணம் சென்றுள்ளதா என்றும் விசாரிக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர். ஓசிஐயு குழுவினர் நடத்திய இந்த ரகசிய சோதனைக்காக, வேலூர் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'சட்டவிரோதமாக சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வதற்காக இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்த கணினியைத் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அதை ஆய்வு செய்த பின்னர் தான், முழு விவரமும் தெரியவரும். வீட்டின் உரிமையாளர் பாபுவின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை ஆய்வு செய்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.