தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 9:55 AM IST

ETV Bharat / state

நிலத்தடி நீர் மாசுபட்டால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு - மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணைச்செயலர்

Ground Water Pollution: நிலத்தடி நீர் மாசுபட்டால் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பதாக வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கிய சர்வதேச கருத்தரங்கில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணைச்செயலர் ஏ.தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மாசுபட்டால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
நிலத்தடி நீர் மாசுபட்டால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

வேலூர்:நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான நிலையான தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று (டிச.14) தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணைச்செயலர் ஏ.தனலட்சுமி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “மனித நாகரீக வளர்ச்சி என்பது நீரை அடிப்படையாகக் கொண்டதாகும். உலகின் அனைத்து பழமையான நாகரிகமும், நதிகளை ஒட்டித்தான் உருவாகியுள்ளன. ஆனால், அத்தகைய நதிகள் தற்போது பலவழிகளில் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் கடந்த வாரம் பெய்த புயல் மழையால், 4 நாட்கள் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இது போன்ற பேரிடர்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். பேரிடர்களைத் தடுக்க முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு நீர் மேலாண்மை என்பது மிகவும் அவசியமாகும். உணவு இல்லாமல் இருந்து விடலாம். ஆனால் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது.

எனவே, நாம் நீர் மேலாண்மையைக் கற்றுக் கொள்ள வேண்டும். கரோனா காலத்தில் இந்திய விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததுடன், அதனை நம்முடைய நாட்டு மக்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் இலவசமாக வழங்கினோம். நிலத்தடிநீர் மாசுபாட்டால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகின்றன. இந்த கருத்தரங்கு மூலம் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்தும், அதனால் வரும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுப்பது குறித்தும் ஆராய்ச்சி செய்து தீர்வு காண வேண்டும்.

மேலும், நீர் மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இத்தகைய உதவிகளைப் பயன்படுத்தி நீரைச் சேமிப்பது, மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், “உலகம் முழுவதற்கும் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது. நான்காவது உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீரால்தான் ஏற்படக்கூடும் என்றும் கருத்துண்டு. அதேநேரம், இந்தியாவில் தண்ணீரின் தேவை அதிகளவில் உள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு 4 சதவீத அளவுக்கு மட்டுமே நன்னீர் உள்ளது. அந்தளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், நீரைப் பாதுகாப்பதும், சேமிப்பதும் மிகவும் அவசியமாகும். குறிப்பாக, மழைநீரைப் பெருமளவில் சேகரிக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவில் 8 சதவீதம் அளவுக்கு மட்டுமே மழைநீர் சேமிக்கப்படுகிறது. மற்றவை வீணாக கடலுக்குத்தான் செல்கிறது. மழைநீரைச் சேமித்திட நம் முன்னோர்கள் உருவாக்கிய அணைகள், ஏரி, குளம், குட்டைகளைப் பாதுகாக்கவும், முறையாகப் பராமரிக்கவும் வேண்டும். அத்தகைய நீர் மேலாண்மையில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்.

இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களில் சராசரி அளவைவிடக் கேரளத்தில் 97 சதவீதமும், உத்தரப்பிரதேசத்தில் 95 சதவீதமும், பீகாரில் 94 சதவீதமும் தண்ணீர் கிடைக்கப் பெருகிறது. அதேநேரம், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் 33 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது. அதேபோல், உலகளவில் ஜப்பான் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது.

இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க, ஜப்பான் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து, நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டியது அவசியம்” என்றார். மேலும், கே.எச்.ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அப்துல் வஹாப் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.

முன்னதாக, கருத்தரங்க மலரை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் இணைச்செயலர் ஏ.தனலட்சுமி, தொழிலதிபர் அப்துல் வாஹாப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த கருத்தரங்கில் 16 நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இதில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும், குண்டாஸ் வழக்குப்பதிவு செய்ததும் திமுக தான் - ஆர்.பி உதயகுமார் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details