வேலூர்:வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்து கூறி பல கோரிக்கைகளை முன் வைத்து வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது மற்றும் பல துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் தங்கள் குறைகளை கூறும் போது அதற்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டிய பல துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் அலட்சியமாக தங்கள் செல்போன்களில் சமையல் செய்வது எப்படி எனவும் மற்றும் சில அதிகாரிகள் திரைப்படங்களை பார்த்துகொண்டு இருந்தனர். இதை கவனித்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார். ஆட்சியரின் கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
மேலும் விவசாயிகள் மீது வனத்துறையினர் தங்கள் மீது பொய் வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும் என பொது கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை எடுத்து கூறினர். இதில் விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை பார்க்காமல் செல்போனை பயன்படுத்திய செயல் தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும்,வேதனையும் அளிக்கிறது என கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறினர்.
மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் என பல முறை அதிகாரிகளிடம் சொன்னார். அதை பொருட்படுத்தாமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தனர். இது கண்டிக்கதக்க செயலாகும். ஆட்சியரின் வார்த்தைக்கு மதிப்பில்லாமல் இருப்பதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.