வேலூர்:அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா இன்று (ஜூன் 29) நடைபெற்றது. இன்று முதல் ஐந்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். ஐந்து நாள்கள் நடைபெறும் விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்நியாசிகள் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். 2016ஆம் ஆண்டில் பிரதமர் மோடி காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்தத் திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.
2025ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 2021 செப்டம்பர் மாதத்திலே அடைந்துவிட்டோம். இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும்.