இந்தியாவில் மீண்டும் வெங்காய விலை அதிகரித்தத்தை அடுத்து மாநில அரசுகள் வெங்காய விலையை குறைப்பதற்கும், பதுக்கலை தடுப்பதற்கும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் வெங்காய பதுக்கல்களை குறைக்க தமிழ்நாடு கூட்டுறவு துறையின் மூலம் குறைந்த விலையில் அவற்றை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு லாரி மூலம் பெரிய வெங்காயம் அனுப்பப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் அக்டோபர் 28ஆம் தேதியன்று 5 ஆயிரத்து 700 கிலோ வெங்காயம் வேலூர் காட்பாடியில் உள்ள நகரமைப்பு கூட்டுறவு பண்டக சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இறக்கப்பட்ட வெங்காயம் அன்று மாலையே காட்பாடி காந்திநகரில் உள்ள பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் விற்பனைக்கு வந்தது. சந்தையில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் அரசின் பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் ஒரு நபருக்கு 2 கிலோ வீதம் 1 கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் காந்தி நகரில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில் மட்டும் தான் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கே அரசு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலை வெங்காயத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.