வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் அம்மா பிரியாணி என்ற பிரபல பிரியாணி கடை நடத்தி வருபவர் மோகன். இவர் கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன் நேற்று முன்தினம் (நவ.22) விடியற்காலை வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த 250 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக டிஐஜி காமினி, எஸ்.பி செல்வகுமார், ASP ஆல்பட் ஜான் ஆகியோர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருட்டு நடந்த வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.