வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் வாசு(56). இவரது மகளின் நிச்சயதார்த்தம் இன்று (நவம்பர் 18) நடைபெற்றதால், வேலூர் சத்துவாசாரியில் உள்ள ஜூனியர் குப்பண்ணா உணவகத்தில் மினி ஹாலை வாடகைக்கு எடுத்து, அவர்களிடமே 100 பேருக்கு சைவ உணவு ஆர்டர் செய்திருந்தனர்.
இதையடுத்து உணவு பரிமாறிய போது, சாப்பாட்டில் டியூப்லைட்டின் (Tubelight) உடைந்த கண்ணாடி துகள்கள் இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், இந்த உணவை 100க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டனர். அவர்களில் 10 பேர், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் பரிசோதித்துக் கொண்டனர்.
மேலும், பெண் வீட்டாரின் உறவினர் சந்தோஷ் என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறி தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வயிற்றில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சிடி ஸ்கேஸ் மூலம் வயிற்றில் நுண்ணிய துகள்கள் இருந்தால் கண்டறிய முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உணவக மேலாளர் மைக்கேல் கூறியதாவது, "எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துவிட்டது. எங்கள் உணவகத்தில் மூன்று கிலோ அளவில்தான் உணவை சமைக்கிறோம். சமைக்கும் போது மேலே இருந்த டியூப்லைட் வெடித்து அதன் கண்ணாடி துகள்கள் உணவில் கலந்தன. இந்த சம்பவத்தை ஊழியர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் நாங்கள் அந்த உணவை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக உணவு சமைத்தோம். அருகில் இருந்த மற்றொரு சிறிய ஹாட்பாக்ஸில்(Hot Box) இருந்த உணவிலும் கண்ணாடி துகள் விழுந்ததை நாங்கள் அறியவில்லை. அதனால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டது" என்றார். இது குறித்து சத்துவாசாரி காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.